Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

எள்

Table of Contents

Sesamum-indicum-plant

எள் (Sesamum Indicum)  அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை.  இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது.  செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது

வேற்று மொழிப்பெயர்கள்ஆங்கிலத்தில் ‘sesame’ ,உருது, சமஸ்கிருதம், ஹிந்தியில் ‘திலா” (தைலம் எனும் சொல் இதிலிருந்து பிறந்தது)

மலையாளம், கன்னடம் : எள்ளு

தெலுங்கு : நுவுளு

உருசியம்: குன்(zh)சுத்

விதை

விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப்படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கருப்பு எள்ளும் அதன் எண்ணெய்யும் பெரும்பாலும் உணவு, மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் என்று திரிபடைந்தது,  ஆனால் பொதுவாக எள்ளில் இருந்து பெறப்படுவதை  நல்லெண்ணெய் என்று அழைப்பர்.

எள்ளு விதைகள் வெதுப்பி (பாண்), ஹம்பர்கர் போன்றனவற்றில் சேர்க்கப்படுவதுண்டு. எள்ளுருண்டை எனும் சுவையான உணவுவகையும் எள்விதைகளில் இருந்து உருவாக்கப்படுகின்றது.

ஆரோக்கியத்தில் எள்ளு

லிக்ணன் (lignin) எனப்படும் வேதியற்பொருள் பொதுவாகத் தாவரங்களில் காணப்படுகின்றது. எள் விதையில் உள்ள செசாமின் (Sesamin), செசாமோலின் எனும் ஒருவகை லிக்ணன்கள் கொலஸ்டரோல் அகத்துறிஞ்சப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் கொலஸ்டரோலின் உற்பத்தியையையும் குறைக்கின்றது. பைட்டோஸ்டெரோல் எனப்படும் பதார்த்தமும் கொலஸ்டரோலின் அளவைக்குரைக்க உதவுகிறது.  இதைத்தவிர இவை ஒட்சியேற்றஎதிர்ப்பொருட்களாகவும் (உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்- antioxidant), கல்லீரலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கு உதவுவனவாகவும், மூப்படையும் செயலைத் தள்ளிப்போடும் தன்மை உடையனவாகவும் உள்ளன. செசாமின் எனப்படும் பதார்த்தம் புற்றுநோய்க்கு எதிரானதாகவும் உள்ளது. ஏனைய எண்ணெய் வகைகளுடன் ஒப்பிடுகையில் நல்லெண்ணெய் அதிகளவு ஆற்றல் கொண்ட உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளாகப் பயன்படுகின்றது. எள்ளு விதையில் காணப்படும் பைட்டிக் அமிலம் (phytic acid) ஒரு வலுவான உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளாகும். இதனாலும் புற்றுநோய்க்கு எதிரான ஒரு உணவாக எள்ளு விளங்குகின்றது.

ஒட்சிசன் (உயிர்வளி) எமக்குத் தேவையான வளி. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில் நிகழும் இரசாயன மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.). இந்தத் தனி “O.” ஆனது வேறு இரசாயன பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சிஏற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை வழிவகுக்க உதவும். நல்லெண்ணெய் ஒரு ஒட்சியேற்ற எதிர்ப்பொருளாகத் (அன்டி-ஒக்சிடன்ட்) தனித்த “O” களை அகற்றுகிறது.

எள்ளில் காணப்படும் உணவுச் சத்துக்கள் ஏராளம். இரும்பு, மகனீசியம், மங்கனீஸ், செப்பு, கல்சியம் போன்ற தாதுப்போருட்களும், உயிர்ச்சத்து B1 (தயமின்), உயிர்ச்சத்து E (டொக்கொபெரோல்) போன்ற உயிர்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

எள்ளில் உள்ள கல்சியச்சத்து எலும்புகளை, பற்களைக் கெட்டிப்படுத்துகின்றது. கல்லீரலில் அல்ககோலை (மது) வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுத்துவதால், நிறைய மதுக்குடித்தவருக்கு உண்டாகும் போதை, மறுநாள் காலையில் ஏற்படும் தொடர்ச்சியான மதுவின் விளைவு என்பவற்றை நீக்கும் ஆற்றல் கொண்டது.

உயர்குருதி அழுத்தத்தைக் குறைக்கின்றது. மனச்சோர்வு, விரக்தி என்பவற்றைப் போக்குகின்றது. எள்ளுவில் ஒலெயிக் அமிலம், லினோலெயிக் அமிலம் போன்ற கொழுப்பமிலங்களும் காணப்படுகின்றன. இவை உயர் குருதி அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உடையன என்பது குறிப்பிடத்தக்கது.

தோலைப் பளபளப்பாக வைத்திருக்க எள்ளு உதவுகின்றது. தோலை ஆரோக்கியத்துடனும் முடியை வலுவாகவும் வைத்திருக்க உதவுவதால் அழகு மெருகூட்டும் பணியில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றது.

எள்ளின் மருத்துவ குணங்கள் (தமிழ் மருத்துவம்)

இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டன. எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது.

எள்ளு இலை

  • இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.
  • இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
  • எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

எள்ளுப்பூ

  • கண்நோய்களைக் குணப்படுத்தும். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும். (எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும்.)

எள்ளு விதை

  • எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.
  • சருமத்தில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் சரும நோய்கள் அகலும்.
  • எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும்.
  • எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் விழுவது நிற்கும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும்.
  • கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, லேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை  விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

 நல்லெண்ணெய்

  • நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் சரும நோய்கள் அணுகாது.

உடல் பருக்க:  இளைத்தவனுக்கு எள்ளு..! எனும் முதுமொழி கூறுவது போல, காலை எழுந்தவுடன் சுமார் 30 கிராம் கருப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க இளைத்தோருக்கு உடல் பருக்கும்.

டுக்கையில் சிறுநீர்:  இரவில் வெண்முள்ளங்கியுடன் எள்ளுச் சேர்த்துக் கொடுக்க அப்பழக்கம் ஒழியும்.