குருதியாக்கம் என்பது குருதி உயிரணுக்கள் உருவாக்கப்படும் நிகழ்வு. இது குருதிப்பெருக்கு அல்லது தொற்று போன்ற அவசரத் தேவைகளின் போது குருதிச் சுற்றோட்டத்தில் போதுமான அளவு குருதிக் கலங்களைப் பேணிப் பாதுகாக்க தொடர்ச்சியாக நிகழும் செயன்முறை ஆகும்.
முளைய விருத்தியின் போது, கல்லீரல் மற்றும் மண்ணீரலில் குருதியாக்கம் ஏற்படுகிறது, பின்னர் அனைத்து எலும்புகளின் அகணிக்குழியில் உள்ள சிவப்பு எலும்பு மச்சையில் ஏற்படுகிறது.
குழந்தைப் பருவத்தில், சிவப்பு மச்சை படிப்படியாக கொழுப்பாக (மஞ்சள் மச்சை) மாற்றப்படுகிறது, இதனால் பெரியவர்களுக்கு சாதாரண குருதியாக்கம் முதுகெலும்புகள், இடுப்பு, மார்பு எலும்பு, விலா எலும்புகள், காறை எலும்பு, மண்டை ஓடு, மேல் புய எலும்பு மற்றும் தொடை எலும்பு ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும், குருதி அணுக்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிவப்பு மச்சை விரிவடையும்.