Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

கூம்புச்சுரப்பி

Table of Contents

PinealGland

கூம்புச்சுரப்பி அல்லது கூம்புருவுடல் அல்லது “மூன்றாவது கண்” அல்லது பீனியல் சுரப்பி (pineal body, epiphysis cerebri, epiphysis ) எனப்படும் சுரப்பி நாளமில்லாச் சுரப்பிகள் (அகஞ்சுரக்கும் சுரப்பிகள்) வகையைச் சார்ந்தது. இது முள்ளந்தண்டு விலங்குகளின் மூளையில் காணப்படுகின்றது; செரடோனினுடைய வழிப்பொருளான மெலடோனின் என்னும் இயக்கு நீரைச் (hormone) சுரக்கின்றது.

மெலடோனின் விழித்தெழல் – துயில்கொள்ளல் சுழற்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

அமைப்பு

இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகாமையில் இரு மூளை அரைக்கோளத்தின் இடையில் அமைந்துள்ளது. இது பைன் மரத்தின் கூம்பினை ஒத்த வடிவம் கொண்டிருப்பதனால் ‘பீனியல்’ என அழைக்கப்படுகின்றது. இந்தச் சுரப்பி மாந்தர்களில் ஐந்து தொடக்கம் எட்டு மில்லிமீற்றர் அளவைக் கொண்டுள்ளது. இது அரிசியின் அளவைக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விருத்தி

மனித பீனியல் சுரப்பி சுமார் 1-2 வயது வரைக்கும் பெருத்துக் கொண்டு செல்லும், அதன் பிறகு நிலையானதாக இருக்கும், எனினும் அதன் எடை பருவமடையும் போது படிப்படியாக அதிகரிக்கும். குழந்தைகளில் மெலடோனின் அளவு அதிகப்படியாகக் காணப்படுதல் பாலியல் வளர்ச்சியைத் தடுக்கின்றது என்று நம்பப்படுகிறது. பீனியல் சுரப்பிக்கட்டிகள் முன்பூப்படைதலுடன் தொடர்பு கொண்டுள்ளது. பருவமடையும் போது ​​மெலடோனின் உற்பத்தி குறைகிறது.

தொழில்

கூம்புச்சுரப்பியின் முதன்மைச் செயல்பாடு மெலடோனின் உற்பத்தி ஆகும். மத்திய நரம்பு மண்டலத்தில் மெலடோனின் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் மிக முக்கியமானது தூக்க முறைகளை மாற்றியமைப்பது ஆகும். மெலடோனின் உற்பத்தி இருளால் தூண்டப்பட்டு ஒளியால் தடுக்கப்படுகிறது.