Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

முதலுதவி

Table of Contents

முதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம்.

தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி தெரிந்திருத்தல் அவசியம்.முதலுதவியின் குறிக்கோள்

  • உயிரைப் பாதுகாத்தல்: முதலுதவி உட்பட எந்தவொரு மருத்துவ சிகிச்சையினதும் குறிக்கோள்.
  • நிலைமை மேலும் மோசமடையாமல் தடுத்தல்: ஆபத்தான சூழலில் இருந்து பாதிக்கப்பட்டவரை அகற்றுதல், நுட்பங்களைப் பயன்படுத்தி ஆபத்து அதிகரித்தலைத் தடுத்தல், எ.கா: குருதிப்பெருக்கை அழுத்தம் மூலம் கட்டுப்படுத்தல்
  • குணமடைதலைத் துரிதப்படுத்தல், எ.கா: சிறிய காயத்திற்கு பிளாஸ்டர் இடல்.

முதலுதவி செய்பவர் கருத்தில் கொள்ளவேண்டியது

  1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல், எ.கா: தீ விபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்தல்
  2. சுற்றுச் சூழலை அவதானித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
  3. பாதிக்கப்பட்டோர்  ஒன்றுக்கு மேற்பட்டோராயின் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது  கவனம் செலுத்தல்.
  4. மருத்துவ உதவி அல்லது பிற உதவி கிடைக்கும்வரை பாதிக்கப்பட்டவரை விட்டு அகலக் கூடாது.
  5. பதட்டம், பயம் இல்லாமல் இருத்தல், பாதிக்கப்பட்டவர் உணர்வுடன் இருக்கும் பட்சத்தில் அவருக்கு தேற்றி ஆறுதல் சொல்லல்.
  6. எத்தகைய உதவி முதலில் தேவையென உடனே தீர்மானித்து உடன் உதவி வழங்குதல்.