உள்ளுறுப்பு இடப்பிறழ்வு

உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversussitus transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும்.

உள்ளுறுப்பு இடப்பிறழ்வு

உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக எவ்வித இடர்களோ நோயறிகுறிகளோ இருப்பதில்லை. எனினும் இயல்பாக உறுப்பு அமைந்துள்ள நபர்களிலும் பார்க்க இவர்களில் இதய சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களில் இடதுபுறத்தில் அமையவேண்டிய இதயம் வலது புறத்தில் காணப்படும். இது வலப்புற இதயம் (டெக்சோ கார்டியா) என அழைக்கப்படுகின்றது. இவ்வகை நபர்களுக்கு மருத்துவ எச்சரிக்கை அடையாள அணிகலன் வழங்கப்படுகின்றது. அவசரகால நிலைமைகளின்போது இடப்புறத்தில் கேட்க வேண்டிய இதய ஒலியை இந்நபர்களில் மருத்துவர்கள் உடனேயே வலது பக்கத்தில் கேட்க மருத்துவ அடையாள அணிகலன் உதவுகின்றது.[1] இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டாக குடல்வால் அழற்சி உள்ளது. பொதுவாக சாதாரண நபர்களுக்கு வலப் புறத்தில் ஏற்படக்கூடிய வலி, இவர்களுக்கு குடல்வால் இடதுபுறத்தில் அமைந்துள்ளதால் இடப்புறத்தில் ஏற்படும்.

உள்ளுறுப்பு இடப்பிறழ்வு ஒரு மரபணு தொடர்புடைய நிலையாகும். ஏறத்தாழ 25% உள்ளுறுப்பு இடப்பிறழ்வு மாந்தர்களில் முதன்மை பிசிர்முனைப்பு இயங்காமைக் (Primary ciliary dyskinesia) குறைபாடு (அல்லது கார்டாஜெனேர் கூட்டறிகுறி) காணப்படும். பிசிர்முனைப்பு சீதத்தை நுரையீரலில் இருந்து அகற்ற உதவும் ஒரு நுண்ணுறுப்பு, இதன் இயங்காமையால் சீதம் சளியாக வெளியேறுவது குன்றும். இது மேலும் நுண்ணுயிரித் தொற்றை ஏற்படுத்தும்.