இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்

இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே.

இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது?

விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும்.

உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடநூல்கள், செய்திகள் என வகைகள் உருவாக்கப்படும். CMS-சை நிர்வகிக்க நிர்வாகிகள், வாசகங்களை இணைக்கத் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பயனர்களை உருவாக்கக் கூடிய வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் தரவுத்தளத்திலேயே சேமிக்கப்படுகிறது.

இதன் படி, CMS மென்பொருளில் தரவுகளையும் படிமங்களையும் இட்டுத் தரவேற்றிச் சேமிக்கும் போது, படிமங்கள் கணிணி வன்தட்டில் நேரடியாகவும், வாசகங்கள், பயனர் பற்றிய குறிப்புகள் கணிணி வன்தட்டில் உள்ள தரவுத்தளத்திலும் சேமிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சீக்வல் (Msql), MySql என்று அழைக்கப்படும் கட்டமைப்பு வினவு மொழித் தரவுத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நிர்வாகி தனது பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் இட்டு தனது விருப்பமான உலாவியின் உதவியுடன் நிர்வாக கட்டுப்பாட்டகத்தை மேலாண்மை செய்வார். இதன் போது வார்ப்புருக்கள் மாற்றுவதன் மூலம் உள்ளடக்கம் மாறாமல் இணையத்தின் வெளித்தோற்றம் மாற்றப்படும்.

நிரல்கூறுகள் (modules),நீட்சிகள் (plugins) என்பன மேலதிகமாக இணைக்கப்படும் புதிய பகுதிகள் ஆகும். உதாரணமாக, எழுந்தமானமாகத் தோன்றும் படிமங்களை அமைக்க அதற்கென்று உள்ள நிரல்கூற்றை இணைத்தால் போதும், பின்னர் அந்த நிரல் கூறுகளைத் தேவைக்குத் தகுந்தவாறு இடது புறமோ வலது புறமோ மாற்றி அமைக்கலாம்.

CMS-சை உருவாக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த படிவ மொழி எழுத்தாளர்கள் தேவை, ஆனால் இதனைப் பயன்படுத்த சிறிய அறிவே போதுமானது.

CMS உடைய சில நன்மைகளைப் பார்ப்போம்;

  • வெவ்வேறுவிதமான வார்ப்புருக்கள் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் வெளித்தோற்றம் ஒரு சில செக்கன்களில் மாறுபடும்
  • அனைத்து உள்ளடக்கங்களையும் இலகுவாக ஒரு வழங்கியில் இருந்து வேறு வழங்கிக்கு மாற்றலாம்.
  • இலகுவாக புதிய விடயங்களை உள்ளடக்கலாம்.
  • ஏற்கனவே உள்ள விடயங்களை இலகுவாகப் புதுப்பிக்கலாம்.
  • முதலில் கூறியது போல இதனைப் பயன்படுத்தப் போதிய அறிவு தேவையில்லை.
  • தேவைப்படும் நேரத்தில் மொழி இடைமுகப்பை (Language interface) மாற்றி வெவ்வேறு மொழி கொண்ட இணையம் உருவாக்கலாம்.

இணைய உள்ளடக்க மேலாண்மைக் கட்டகங்கள்.

படிவ மொழிகளைப் பொறுத்தும் உருவாக்கப்பட்ட விதத்தினைப் பொறுத்தும் பல்வேறுபட்ட இணைய CMSகள் உண்டு. JAVA, PHP, PYTHON, ASP.NET, PERL, RUBY ON RAILS எனப் பல்வேறுபட்ட படிவ நிரல் மொழிகள் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

இலவசமாகப் பெறக்கூடிய சில உள்ளடக்க மேலாண்மைக் கட்டகங்கள்.

  • ஜூம்லா (JOOMLA)
  • வேர்ட் பிரஸ் (WORDPRESS)
  • துருபால் (DRUPAL)