உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை)

வரலாறு

ரொபர்ட் கூக் (Robert Hooke) என்பவரால் முதன் முதலில் உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆங்கிலேய [[நுண்ணோக்கி]] ஆராய்ச்சியாளர் 1665ம் ஆண்டு தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைகளின் மெல்லிய பகுதியினை ஆராŒய்ந்தார். அதன் போது கண்ணுற்ற தேன்கூடு போல் காணப்பட்ட சிறுசிறு அறைப் பகுதிகளுக்கு ‘செல் (cell)’ எனப்பெயரிட்டார். இலத்தீன் சொல்லான cellula என்பதில் இருந்தே cell எனும் சொல் உருவாகியது, இதற்கு அர்த்தம் ‘அறை’ என்பதாகும்.

உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை)

1838 – 39 காலப்பகுதியில் மத்தியாசு இயாகோப் சிலெய்டன் (Matthias Jakob Schleiden) மற்றும் தியோடர் சுவான் ( Theodor Schwann) என்பவர்களால் உயிரணுக் கொள்கை வெளியிடப்பட்டது.

இக் கொள்கையில் (சிலெய்டன் – சுவான் ) உள்ள மூன்று கூறுகள்: (1)

* அனைத்து உயிர்களும் ஆக்கப்படுவதற்கு உயிரணு ஒரு தெளிவான உருப்படியாகவும் கட்டடக்கண்டமாகவும் (building block) விளங்குகின்றது.
* உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு ஆகும்.
* ஒரு உயிரணு சுயமாக உருவாகின்றது. இது படிகம் உருவாதல் போன்ற ஒரு சுயமான உருவாக்கம் ஆகும்.

இக்கொள்கையில் மூன்றாவது தவறானது எனக் கருதப்படவே 1858 இல் உருடோல்வ் விர்ச்சோ (Rudolf Virchow) என்பவரால் “ஒரு உயிரணு ஏற்கனவே உள்ள உயிரணுவில் இருந்தே உருவாகிறது” (omni cellulae e cellula) என்று மாற்றப்பட்டது.

தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பயன்பாட்டில் உள்ள புதிய கொள்கை:

* அனைத்து உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை.

· உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு ஆகும்.

· ஒரு உயிரணு ஏற்கனவே உள்ள உயிரணுவில் இருந்தே உயிரணுப் பிரிவின் (கலப்பிரிவு) மூலம் உருவாகிறது. (சுயமான உருவாக்கம் அல்ல)

· உயிரணுவில் பரம்பரைக்குரிய தகவல்கள் (டி.என்.ஏ) காணப்படுவதுடன் கலப்பிரிவு மூலம் மற்றைய கலத்துக்குக் கடத்தப்படுகின்றன.

· ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரிகளில் உயிரணுவின் வேதியல் உள்ளடக்கங்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும்.

· வளர்சிதை மாற்றம் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் உயிரணுவின் உள்ளேயே நடைபெறுகின்றன.