உயிரணு வகைகள் (கல வகைகள்)

உயிரணுக்களை பல்வகையாக பாகுபடுத்தலாம். உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருகல உயிரினம், பல்கல உயிரினம் எனவும் உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து நிலைக்கருவிலி (புரோகரியோட்டுக்கள் – prokaryotes ), மெய்க்கருவுயிரி (இயூகரியோட்டுக்கள் –  eukaryotes ) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரி உயிரணுக்கள் அவற்றின் அமைப்பைப் பொறுத்து மேலும் தாவரக் கலம், விலங்குக் கலம் எனவும் வகுக்கப்படுகின்றது. இவற்றை விடப் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பாட்டைப் பொறுத்தும் அமைப்பைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. எ.கா: குருதிக்கலம், குருத்தணு, நரம்புக் கலம்.

 உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து மட்டுமல்லாது அவற்றின் தொழில், புறத்தோற்றங்கள் போன்றனவும்  நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி என உயிரணுவை வகைப்படுத்த உதவுகின்றது.

நிலைக்கருவிலிமெய்க்கருவுயிரி
உயிரினங்கள்பக்டீரியா, ஆர்க்கீயாமுதனுயிரி, பங்கசு, தாவரங்கள், விலங்குகள்
பொதுவான அளவு~ 1–5 µm~ 10–100 µm 
கருகருப்போலிப் பகுதி; மெய்யான கரு இல்லைஇரட்டை மென்சவ்வாலான மெய்யான கரு
DNAவட்டமானது (பொதுவாக)ஹிஸ்டோன் புரதம் கொண்ட நீண்ட  மூலக்கூறுகள் (நிறமூர்த்தம்)
RNA-/புரத தொகுப்புகுழிய முதலுருவில்RNA-தொகுப்பு கருவுள்; புரதத் தொகுப்பு குழியமுதலுருவில்
இரைபோசொம்50S+30S60S+40S
குழிய முதலுரு வடிவம்மிகவும் குறைந்தஅகமென்சவ்வுகள், கலவன்கூடுகளால் உருவாக்கப்பட்டுள்ள மிகையான வடிவம்
உயிரணு அசைவுஃபிளாஜெலின் எனும் புரதத்தாலான கசையிழைகசையிழை (விந்தணுக்கள்), பிசிரிழை (பலோப்பியன் குழாயில் உள்ள உயிரணுக்கள்), நூலிழைக் கால்கள்
இழைமணிஇல்லைஒன்று  தொடக்கம் ஆயிரக்கணக்கான (சிலவற்றில் இல்லை)
பச்சையமணிஇல்லைதாவரங்களிலும் அல்காக்களிலும்
ஒழுங்கமைப்புபொதுவாக தனிக் கலங்கள்தனிக் கலங்கள், கூட்டங்கள், உயர்மையான பல்கல விலங்குகளில் சிறப்புக் கலங்கள்
கலப்பிரிவுஒற்றைப் பிளவுஇழையுருப்பிரிவு,
ஒடுங்கற்பிரிவு

1.நிலைக்கருவிலி (Prokaryotes): நிலையான கருவற்ற உயிர்கள் இவற்றுள் அடங்கும். (வளைய டி.என்.ஏ ஐ கொண்டிருக்கின்றன) அவற்றில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப் புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியா மற்றும் ஆர்க்கீயா இவற்றின் பிரிவுகள் அகும்.

2. மெய்க்கருவுயிரி (Eukaryotes): நிலைக்கருவுள்ள உயிரினங்கள் கருமென்சவ்வினால் சூழப்பட்ட தெளிவான கருவையும், மென்சவ்வால் சூழப்பட்ட (இழைமணி, பச்சையவுருமணி, இலைசொசோம், அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை மற்றும் அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை, புன்வெற்றிடம்) புன்னங்கங்களையும் கொண்டிருக்கின்றன.

நிலைக்கருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) உள்ள நகரிழைகள் (Flagella), கணிமி (plasmid) போன்ற அமைப்புகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் ((Eukaryote)) காணப்படுவதில்லை.

நிலைக்கருவுள்ள உயிர்களிடம் (Eukaryote) உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்ற கலப்புன்னங்கங்கள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) இல்லை. இவை இரு உயிர்களில் காணப்படும் றைபோசோம் அளவுகளில் மாற்றங்கள் உள்ளன. நிலைகருவற்ற உயிர்களிடத்தில் 70S றைபோசோமும் நிலைகருவுள்ள உயிர்களிடம் 80S றைபோசோமும் உள்ளன. றைபோசோமில் புரத உற்பத்தி நடைபெறுகிறது. பெரும்பாலும் நோய்களை அழிக்கும் அனைத்து மருத்துகளும் (antibiotics), இப்புரதஉற்பத்தியை தடுத்து, நுண்ணுயிர்களை பல்கிப் பெருக விடாமல் தடுக்கக்கூடியன.

நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics), ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் எதிரிகள், 70S றைபோசோமில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க வல்லன.

மேலும் நிலைக்கருவுள்ள உயிர்களிடம் உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்றவைகளில் டி.என்.ஏ க்கள் உள்ளன. இவை பச்சையவுருமணி டி.ஏன்.எ என்றும், இழைமணி டி.ஏன்.எ என்றும் அழைக்கப்படும். படிவளர்ச்சி கொள்கையில் இவைகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் இருந்து தோன்றி இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பச்சையவுருமணி நீலப் பாசிகளிடம் இருந்தும், இழைமணி பாக்டீரியாவிடம் இருந்தும் வந்திருக்கக்கூடும். இது அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை (Endosymbiotic) என அழைக்கப்படும். இக்கொள்கையை உறுதிபடுத்த மேலும் சில சான்றுகள்:

1. பச்சையவுருமணி, இழைமணி உள்ள றைபோசோம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்ற 70S அளவுகளிலே உள்ளன.

2. பச்சையவுருமணி மற்றும் இழைமணிகளில் உள் மற்றும் வெளிச் சவ்வுகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்று ஒத்து உள்ளது.

3. டி.என்.ஏ ஆய்வுகள் முடிவும் பாக்டீரியா டி.என்.ஏக்களோடு ஒற்றுமையாக செல்கின்றன.

4. பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியின் போது, தொடங்கப்படும் அமினோ அமிலம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்றது ஆகும். (N-formylmethionine ).

5. இழைமணி, நிலைகருவற்ற உயிர்களை போன்ற மாற்றி அமைப்புகள் (transport system) கொண்டுள்ளன.

6. நிலைகருவற்ற அளவுகள் நிலைகருவற்ற உயிர்களை போன்ற அளவுகாகும்.

7. மேலும் நிலைகருவற்ற உயிர்களின் புரத உற்பத்தியை தடுக்கும் அனைத்து நுண்ணுயிர் எதிரிகளும் பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியைத் தடுக்கின்றன.