உயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவம்

ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது.

பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்தில் இருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்)தொகுக்க முடியும்.