உயிர்ச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது.(11)

குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள்

குடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.

அளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும்

நாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம்.

உயிர்ச்சத்து மாற்றீடுகள்

சிறந்ததொரு உயிர்ச்சத்து மாற்றீடு உணவாகும். எனினும் உணவின் மூலம் பெற முடியாத சூழ்நிலை உள்ளபோது அல்லது வேறு சில நோய்களின் பாதிப்பால் உடல் நலத்தை ஈடுசெய்வதற்கு மருத்துவர்களால் உயிர்ச்சத்து மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகிறது.